திருவனந்தபுரம்: இண்டி கூட்டணிக்கு தலைவராக தகுதி உள்ளவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நேருவுக்கு பின்னர் பிரதமராகும் வாய்ப்பை பெற்றவர் காமராஜர். ஆனால், தமக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாது எனக் கூறி அவர் அந்த வாய்ப்பை மறுத்தார். இன்று ஸ்டாலினும் அதே போன்ற சூழலில் உள்ளார் என நான் கருதுகிறேன்.
நாட்டின் பிரதமராக ராகுல் வருவதற்கும், கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கும் வலுவான ஆளுமை தேவை. ஸ்டாலின் வெறும் அரசியல் முழக்கங்களை முன்வைப்பவர் அல்ல. கடந்த ஓராண்டாக அவர் பேசி வரும் பல விஷயங்கள் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளன. நாட்டிற்கு தேவையான முக்கிய பிரச்னைகளையே அவர் முன்வைத்து வருகிறார்.
எனவே, ராகுல் பிரதமராக வருவதற்கு ஸ்டாலின் துணை நிற்பார். கூட்டணியை ஒருங்கிணைக்கும் திறன் அவரிடம் உள்ளது. தலைவராக செயல்பட தகுதியும் திறனும் ஸ்டாலினிடம் உள்ளது. ராகுல் பிரதமராக வருவதற்கு அவர் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார்; பின்னால் இருந்து கூட்டணியை தாங்கி பிடிப்பார் என்ற நற்பண்பு அவரிடம் உள்ளது என நம்புகிறேன்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் வெற்றிக்கான பயணம் தென்படவில்லை. கட்சியின் பொறுப்புகளில் இருப்பவர்கள் கட்சியை வளர்க்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.
இவ்வாறு மணிசங்கர் அய்யர் பேசினார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் சச்சின் பைலட், மணிசங்கர் அய்யரின் கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை; அவர் தற்போது காங்கிரசில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
