சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற நிலையில், நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 3–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் களமிறங்கினர். கிராவ்லி 16 ரன்னிலும், டக்கட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஜாக்கப் பெத்தல் 10 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 72 ரன்களுடனும், ஹாரி புரூக் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
