ஆப்பரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் தலைவர்களுக்கும் அச்சம் ஏற்படுத்தியது: சர்தாரி ஒப்புதல்
இஸ்லாமாபாத்:
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு மட்டுமல்லாமல், அந்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7-ம் தேதி ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தகர்த்தன. இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, மோதல் முடிவுக்கு வந்தது.
இந்தியாவின் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு மட்டுமல்லாமல், அந்நாட்டு தலைவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ஆப்பரேஷன் சிந்தூர் தொடங்கிய நேரத்தில் எனது ராணுவ செயலாளர் என்னுடன் அருகில் இருந்தார். அவர் என்னிடம் வந்து, ‘போர் துவங்கிவிட்டது’ என தெரிவித்தார். ஆனால், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே விரைவில் போர் துவங்க வாய்ப்பு உள்ளது என நான் தெரிவித்திருந்தேன். அதனால், அந்த செய்தி எனக்கு புதியதாக இல்லை” என்றார்.
மேலும், “அவர் என்னிடம், நாம் பதுங்குக்குழிக்குள் சென்று விடுவோம் என கூறினார். அதற்கு நான், ‘தலைவர்கள் பதுங்குக்குழிக்குள் மரணமடையக்கூடாது; போர்க்களத்தில் தான் இருக்க வேண்டும்; பதுங்குக்குழிக்குள் இருக்கக் கூடாது’ என தெரிவித்தேன்” என்றும் சர்தாரி கூறினார்.
இவ்வாறு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேசினார்.
