புதுடில்லி:
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் சேதம் ஏற்பட்டதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான இஷார் தார் கூறுகையில், நூர் கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியதாகவும், அந்த தாக்குதலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களும் இலக்காக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியா பாகிஸ்தானை நோக்கி ட்ரோன்களை ஏவியதாகவும், 36 மணி நேரத்தில் மொத்தம் 80 ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். இதில் 79 ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் தரப்பு இடைமறித்து தடுத்ததாகவும், ஒரு ஆளில்லா விமானம் மட்டுமே ஒரு ராணுவ தளத்தை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மே 10-ம் தேதி அதிகாலையில் நூர் கான் விமானப்படை தளத்தை தாக்கி இந்தியா தவறு செய்துவிட்டதாக இஷார் தார் குற்றம் சாட்டினார்.
ஆப்பரேஷன் சிந்தூர் முடிவடைந்த பின்னர், பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்கள் சேதம் அடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
