இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்று வரும் எல்லை மோதல் தற்போது வெளிப்படையான போராக மாறியுள்ளது என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 2,611 கிலோமீட்டர் நீளமான ‘டுராந்த் கோடு’ எல்லை உள்ளது. இந்த எல்லையை ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
பாகிஸ்தான் தரப்பின் குற்றச்சாட்டுப்படி, ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள ‘டிடிபி’ (Tehreek-e-Taliban Pakistan) அமைப்பு தொடர்ந்து பாகிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என பாக். குற்றம்சாட்டுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் விமானப்படை கடந்த வாரம் ஆப்கன் எல்லைக்குள் நுழைந்து டிடிபி முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதற்கு எதிராக ஆப்கானிஸ்தானும் பதிலடி தாக்குதல் மேற்கொண்டது.
தொடர்ந்து, காபூல், கந்தகார், பக்தியா உள்ளிட்ட பகுதிகளில் பாக். நடத்திய வான்வழி தாக்குதலில் பல தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, ஆப்கானிஸ்தான் தரப்பும் பதிலடி தாக்குதலில் பாக். ராணுவத்தினருக்கு சேதம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா, “எங்கள் பொறுமை முடிந்துவிட்டது. இது தற்போது வெளிப்படையான போராக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார். தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் பல தலிபான் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், இருநாடுகளும் அமைதி காக்க வேண்டும் என சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
