ஆட்சி அதிகாரம் தி.மு.க.வுக்கே: காங்கிரஸ் கலகக் குரல்களுக்கு பெரியசாமி பதில்
வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும், ஆட்சியில் எந்த விதமான பங்கும் வழங்கப்படாது என திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
‘தனித்தே அரசு அமைப்போம்; கூட்டணி ஆட்சி கிடையாது’ என தி.மு.க. மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், ‘அதிக தொகுதிகள் மட்டுமின்றி ஆட்சியில் பங்கும் வேண்டும்’ என வெளிப்படையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மாநில தலைவர்கள் பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்தது தி.மு.க. தலைமைக்கு விருப்பமில்லாத ஒன்றாக மாறியுள்ளது.
கூட்டணி அரசியல் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே சமூக வலைதளங்களிலும் கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தி.மு.க. அதிக தொகுதிகளை ஒதுக்காவிட்டால், மாற்று கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்ற குரலும் காங்கிரசில் சில தரப்பினரிடமிருந்து எழுந்துள்ளது.
இந்த சூழலில், கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கும் விவகாரம் எதிர்காலத்தில் சிக்கலாக மாறாமல் இருக்க, ஆரம்பத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்லில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி,
“ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரசின் உரிமை தான். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அதிகாரப் பங்கு கொடுப்பது என்றே இல்லை. தனிப்பட்ட கட்சியின் ஆட்சி தான் நடைபெறும்; கூட்டணி ஆட்சி கிடையாது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்,” என்று தெரிவித்தார்.
மேலும், பொங்கல் பண்டிகையன்று பெண்களை மகிழ்விக்கும் வகையில் முதல்வர் ஒரு ‘இனிப்பான அறிவிப்பு’ வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
