மதுரை: மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற திமுக தென் மண்டல ஓட்டுச் சாவடி முகவர்கள் குழு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: திமுக போன்று ‘பூத் லெவல்’ நிர்வாகிகளை தயார்படுத்தும் கட்சி எதுவுமில்லை. நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை அஞ்ச வைப்போம். இது வெறும் ‘டிரைலர்’ தான்; திருச்சியில் மார்ச் 9ல் நடைபெறும் மேற்கு மண்டல மாநாட்டில் ‘மெயின் பிக்சர்’ காட்டுவோம். 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த தேர்தலில் தெற்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் முழுமையான வெற்றியை தந்தனர். இப்போது அதைவிட அதிக திட்டங்களை வழங்கியுள்ளோம். ஒவ்வொரு ஓட்டுச் சாவடி முகவரும் 350 ஓட்டுகள் இலக்கு வைத்து செயல்பட்டால், 2.50 கோடி ஓட்டுகளை பெற முடியும்.
ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களை தாண்டி வீடு தோறும் சென்று ஓட்டு கேட்க வேண்டும். கடைசி ஓட்டு எண்ணப்படும் வரை கவனமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஆட்சியும் ‘ரிபீட்’ ஆகும்.
மகளிர் உரிமைத் தொகையை தேர்தலை காரணமாக வைத்து மத்திய அரசு முடக்க முயன்றது; அதை முறியடித்துள்ளோம். வரும் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்துவோம். தமிழக வளர்ச்சி எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.
மார்ச் 1ல் மதுரைக்கு வரவுள்ள பிரதமரிடம் மாநிலத்திற்கு உரிய திட்டங்கள், மெட்ரோ, நீட் விலக்கு உள்ளிட்ட கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும். தமிழக நலனுக்காக குரல் கொடுக்க ஆட்சியே போனாலும் அஞ்ச மாட்டேன். மிசா, தடா போன்ற காலங்களை பார்த்த இயக்கம் திமுக. சி.பி.ஐ., இ.டி., – ஐ.டி. என எதை அனுப்பினாலும் அஞ்ச மாட்டேன்.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது திமுகவினரின் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
