சென்னை: தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமநிலையான பதில் அளித்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படுமா அல்லது தேர்தல் பிந்தைய ஆட்சியில் அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுகிறது என்றார்.
தமிழகத்திற்கும் மக்களுக்கும் நன்மை தரும் அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டணி குறித்த கேள்விக்கு, “உரிய நேரத்தில் அறிவிப்போம். Be Cool, No Tension,” என சிரித்தபடி பதிலளித்தார்.
ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு உருவானால் அது தமிழகத்திற்கும் மக்களுக்கும் நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். “வரும் ஆட்சி குறித்து மக்கள் தீர்ப்பே இறுதி. தேர்தல் முடிவுகள் வரட்டும்; அத்தகைய சூழல் உருவாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,” என்றார்.
மேலும், ஈஷா யோகா மையத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரிடம் மரியாதை நிமித்தமாக பேசியதாக தெரிவித்தார். பிரதமர் தமிழகம் வருவது நல்லதே; அதன் மூலம் மாநிலத்திற்கு நன்மை ஏற்பட்டால் அதனை முதலில் வரவேற்போம் என்றும் கூறினார்.
