ஆட்சிக்கு ஆபத்து என்ற பயத்தால் நிரந்தர டிஜிபி நியமனம் தாமதம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
சேலம்: ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தால் தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி நியமனத்தை திமுக அரசு திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக இருக்கலாம்; ஆனால் சேலத்தை ஆள்வது அதிமுக தான். ஒரு ஆட்சி மக்களின் நலனுக்காக அமைய வேண்டும். ஆனால், 8 கோடி மக்களிடம் சுரண்டி, ஒரு குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழ்கிறது. இது நியாயமா? என்றார்.
நியாயமா?
நாலே முக்கால் ஆண்டுகள் கும்பகர்ணன் போல தூங்கிவிட்டு, தற்போது தான் மக்களை பற்றி யோசிப்பதாக கூறும் அரசு, வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகமே இன்று போராட்டக் களமாக மாறி உள்ளது. உங்கள் ஆட்சியில் நல்லது செய்திருந்தால், ஏன் இத்தனை போராட்டங்கள் நடைபெறுகின்றன என கேள்வி எழுப்பினார்.
ஒப்பிட்டு பாருங்கள்
லஞ்சம், கொள்ளை அடிப்பதில் திமுக சிறந்த ஆட்சி அமைத்துள்ளது. மக்களுக்கு நன்மை செய்வதில் அல்ல. எந்த வழிகளில் ஊழல் செய்வது, மக்களை எப்படி சுரண்டுவது என்பதில் திமுக முன்னிலை வகிக்கிறது. திமுக, அதிமுக ஆட்சிகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர், தமிழகத்தில் 6,999 போக்சோ வழக்குகள் பதிவாகி, ரூ.104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அப்படியென்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிறுமிகளுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
பயம்
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் வளர்ச்சி ஏற்படும். ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்கள் தினமும் அச்சத்தில் வாழ்கின்றனர். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு தவறியதால், இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கக் கூடிய நிரந்தர டிஜிபி இதுவரை நியமிக்கப்படவில்லை. பலமுறை இதை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் தான் டிஜிபி நியமனம் தாமதமாகிறது என்றார்.
குடும்ப அரசியல்
அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளராக வர முடியும். ஆனால் திமுகவில் அப்படியில்லை. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின், அடுத்ததாக இன்பநிதி என குடும்ப அரசியல் தொடர்கிறது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் உதயநிதி துணை முதல்வரானார். மூத்த அமைச்சர் துரைமுருகன் அந்த குடும்பத்தில் பிறக்காததால், அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை என்றார்.
180 நாட்களாக…
நிதியில்லை என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்களுக்கு நிதி இல்லை. ஆனால், கார் பந்தயம் நடத்தவும், எழுதாத பேனாவை நடுக்கடலில் நிறுவவும் ரூ.82 கோடி செலவு செய்கிறார்கள். மகளிர் சுயநிதித் திட்ட ஆய்வு என்ற பெயரில் ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு பணம் ஊதாரித்தனமாக செலவிடப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சி அமைந்தால் இவை அனைத்துக்கும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலைத் திட்டம் 180 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
