புதுடெல்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடைபெற்று வருகிறது. சீனியர், ஜூனியர் மற்றும் இளையோர் பிரிவுகளில் நடைபெறும் இந்த தொடரில், 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர். தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால், 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை இஷா சிங் 239.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். சீன தைபேயின் செங் யென் சிங் 235.4 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், யூ அய் வென் 217.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் சுருச்சி சிங் (197.7) 4-வது இடமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற நட்சத்திர வீராங்கனை மானு பாக்கர் (135.3) 7-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.
அணிகள் பிரிவில் இந்தியா தங்கம்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில், சுருச்சி சிங் (576), மானு பாக்கர் (575), இஷா சிங் (575) ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,726 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. வியட்நாம் அணி (1,713) வெள்ளிப்பதக்கத்தையும், சீன தைபே அணி (1,711) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.
ஆண்கள் பிரிவில் வெண்கலம்
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறிய உலக சாம்பியன் இந்திய வீரர் சம்ரத் ராணா, இறுதிப்போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. அவர் 220.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார்.
உஸ்பெகிஸ்தானின் விளாடிமிர் ஸ்வெச்னிகோவ் (242) தங்கமும், கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஜான் (241) வெள்ளியும் கைப்பற்றினர்.
இதன் அணிகள் பிரிவில் சம்ரத் ராணா (581), ஷர்வன் குமார் (578), வருண் தோமர் (573) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,732 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றது. உஸ்பெகிஸ்தான் (1,732) தங்கமும், கஜகஸ்தான் (1,731) வெண்கலமும் பெற்றன.
ஜூனியர் பிரிவில் இந்திய ஆதிக்கம்
ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவின் கவின் அந்தோணி 240.9 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். கஜகஸ்தானின் இமான்டோஸ் பெக்டெனோவ் (236.7) வெள்ளியும், இந்தோனேசியாவின் மாருப் ஆலியா (215.6) வெண்கலமும் பெற்றனர்.
இதன் அணிகள் பிரிவில் இந்திய அணி 1,735 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
நேற்றைய போட்டிகள் முடிவில், இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
