புதுடில்லி: ராஜ்யசபாவில் இன்று பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், யாருக்கும் புரியாத வகையில் உருவகங்கள், உவமைகள் கலந்து பேசியதால், அவையில் இருந்த எம்.பி.க்கள் குழப்பமடைந்தனர்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. இதில், ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன் உரையாற்றினார். இது, ராஜ்யசபாவில் அவர் ஆற்றும் முதல் உரையாகும்.
முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், பின்னர் தமிழில் பேசத் தொடங்கினார். ஆனால், அவர் பயன்படுத்திய மொழிநடை, உருவகங்கள் மற்றும் கவிதை வடிவமான பேச்சு, அவையில் இருந்த எம்.பி.க்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
கமல்ஹாசன் தனது உரையில், இசைமேதை தியாகராஜர், பிச்சைப் பாத்திரம், உண்டியல், பிச்சை, சாபம், பகுத்தறிவு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உருவகமாக முன்வைத்தார்.
“தமிழ் பிச்சை எடுக்காது”, “தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்”, “ஓட்டையும் நாட்டையும் விற்க மாட்டேன்” போன்ற சொற்களையும் அவர் பயன்படுத்தினார்.
மேலும், “உம் வினை உம்மைச் சுடுக”, “தமிழ் என்றும் வாழும்”, “நாளை நமதே” போன்ற கவிதைச் சொற்களால் உரையை நிறைவு செய்தார்.
கமல்ஹாசனின் இந்த உரையை கேட்டு, அவையில் இருந்த நன்கு தமிழ் தெரிந்த எம்.பி.க்களே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், ராஜ்யசபாவில் அவரது உரை விவாதப் பொருளாக மாறியுள்ளது.
