அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு
மதுரை:
சட்டம்–ஒழுங்கு நிலைமையை காரணமாகக் கூறி நீதிமன்ற உத்தரவுகளை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இது முற்றிலும் மன்னிக்க முடியாததாகவும், சட்டம்–ஒழுங்கு சீர்குலையவும், அரசியலமைப்பு இயந்திரம் செயலிழக்கவும் வழிவகுக்கும் என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் எழுமலை பகுதியைச் சேர்ந்த ராம ரவிகுமார் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 1ம் தேதி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபத்தை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் கோயில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராம ரவிகுமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தை அவசர வழக்காக டிசம்பர் 3ம் தேதி விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, டிசம்பர் 4ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில், கார்த்திகை தீபத்தை தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்றும், அதற்குப் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், உத்தரவு நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
டிசம்பர் 9ம் தேதி நடந்த விசாரணையில், நீதிமன்ற உத்தரவு மீண்டும் நிறைவேற்றப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார். மனுதாரர் தரப்பினரை மலையேற அனுமதிக்கவில்லை என்றும், திருப்பரங்குன்றத்தில் சிஐஎஸ்எப் வீரர்களை செல்ல விடாமல் போலீசாருடன் கமிஷனர் தடுத்ததாக துணை கமாண்டன்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் சட்டம்–ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிசம்பர் 17ம் தேதி காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலி மூலம் ஆஜராகினர். மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மற்றும் கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் நேரில் ஆஜராகினர்.
விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுக்கு முழு மரியாதை அளிப்பதாகவும், அதை நிறைவேற்ற மறுக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், சட்டம்–ஒழுங்கு பிரச்னை காரணமாக மேல்முறையீடு செய்யப்பட்டதாகவும், எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும் தலைமைச் செயலர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு வழக்கிலும், தடை உத்தரவுகளை கலெக்டர்கள் தாங்களாகவே பிறப்பித்தார்களா அல்லது மேலதிக அறிவுறுத்தலின் அடிப்படையிலா என்பதை தெளிவுபடுத்துமாறு தலைமைச் செயலரிடம் கேட்டார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆலமரத்துப்பட்டியில் சட்டவிரோத சர்ச் கட்டுமானம் தொடர்பான வழக்கிலும், சட்டம்–ஒழுங்கு காரணத்தை முன்வைத்து நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார். கட்டுமானம் தொடர்வது கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்கப்படாத நிலையில், அந்த உத்தரவு கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், சட்டம்–ஒழுங்கு காரணம் காட்டி அதை மீற முடியாது என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.
இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
