அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சர்வதேச பொருளாதார அவசர அதிகாரங்கள் சட்டத்தை பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதித்த வரி உயர்வுகள் குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்தது.
வர்த்தக பற்றாக்குறையை காரணமாக காட்டி, கடந்த ஆண்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்புகளை அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸின் ஒப்புதல் பெறப்படாமல், அவசர அதிகாரங்கள் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக எதிர்ப்பு எழுந்தது. டிரம்புக்கு முன் பதவி வகித்த அதிபர்கள், இந்த சட்டத்தை பெரும்பாலும் பொருளாதார தடைகள் விதிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தியிருந்தனர்.
இறக்குமதி வரி உயர்வால் பொருட்களின் விலை உயர்ந்து, உள்நாட்டு வணிகர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி, சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் 12 மாகாண அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அமர்வில், ஆறு நீதிபதிகள் பெரும்பான்மை கருத்தாக தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, “சர்வதேச பொருளாதார அவசர அதிகாரங்கள் சட்டம் அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. இத்தகைய பரந்த அதிகாரத்திற்கு காங்கிரஸ் அங்கீகாரம் அவசியம்,” எனக் குறிப்பிட்டது. அவசர சட்டத்தில் உள்ள சில சொற்களை அடிப்படையாக கொண்டு வரம்பற்ற வரி விதிக்கும் அதிகாரம் கோருவது சட்ட ரீதியாக நிலைக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த தீர்ப்பின் மூலம் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் செல்லாதவை எனத் தெளிவானது. அதே நேரத்தில், பிற சட்ட பிரிவுகள் மூலம் அதிபர் தனது நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வாய்ப்பு இருக்கலாம் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
