மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி மரணம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள விஷம் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது.
வழக்கறிஞரான நவால்னி, ரஷ்யாவில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து பிரபலமானவர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது யுனைடெட் ரஷ்யா கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பல வழக்குகளில் நவால்னிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையை தீவிரவாத அமைப்பாக ரஷ்ய அரசு அறிவித்தது. 2023ஆம் ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
சைபீரியாவில் உள்ள சிறையில் இருந்தபோது, 2024 பிப்ரவரியில் நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்தார். ரஷ்ய சிறைத்துறை, நடைபயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து இறந்ததாக தெரிவித்தது.
இந்நிலையில், ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாடுவில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், நவால்னியின் உடல் மாதிரிகளில் ‘எபிபாட்டடின்’ எனப்படும் மிகக்கொடிய நச்சு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன என அவர் சாடினார்.
