அரசு பஸ்களில் தமிழகம் பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்: சீமான் கேள்வி
அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்’ என்ற பெயரை முழுமையாக எழுத வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். ‘தமிழ்நாடு’ பெயரை தவிர்த்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப காலங்களில் அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்’ என்றே எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது திமுக அரசு தமிழ்நாடு என்ற பெயரை தவிர்ப்பதற்கான அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம் உள்ளது என்றும், வண்ணப்பூச்சு தொடர்பான பிரச்சினையா அல்லது ஒப்பந்ததாரர் ஊழலா, அல்லது போக்குவரத்துத்துறைக்கு இழப்பு ஏற்படும் என்ற காரணமா என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும், திமுக அரசு தமிழ்நாடு என்ற பெயரை பேருந்துகளில் சேர்க்க மறுப்பது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். யாருடைய உத்தரவின் பேரில் ‘தமிழ்நாடு’ பெயர் தவிர்க்கப்படுகிறது என்றும், இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா, தமிழ்நாடு மண், மொழி, மானத்தை காக்கும் விதமா என்றும், இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்றும் சீமான் விமர்சித்துள்ளார். ‘தமிழ்நாடு’ என்ற பெயர் ஒவ்வொரு தமிழனின் உயிர் மூச்சு என்றும், அந்த பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காக பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி உயிர்நீத்ததை அவர் நினைவுபடுத்தினார்.
கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்களது மாநிலப் பெயரை பெருமையுடன் பேருந்துகளில் எழுதியுள்ள நிலையில், திமுக அரசுக்கு மட்டும் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். போக்குவரத்து கழகப் பெயரிலிருந்து தமிழ்நாடு என்ற சொல்லை நீக்கியதன் மூலம், தமிழ்நாடு நாள் கொண்டாட்ட அறிவிப்பு தன்னாட்சி பற்றினாலல்ல, தற்புகழ்ச்சிக்கானதே என்பதை இது வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு உடனடியாக பழையபடி அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம்’ என்று முழுமையாக எழுத வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
