உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை கட்டாயமாக வாசிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்ள உதவும் என்றும், அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். மாணவர்களிடையே சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.
புதிய உத்தரவின் படி, பள்ளிகளில் நடைபெறும் காலை வழிபாட்டு கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். அதனுடன், அந்த ஸ்லோகத்தின் பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் விளக்கங்களையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தராகண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், மாநிலத்தில் உள்ள 17 ஆயிரம் அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த நடவடிக்கை முழுமையாக செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை வாசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
