திருநெல்வேலி: சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணிபுரியும் பேராசிரியர் காஜா கனி அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில், மனிதநேய மக்கள் கட்சியுடன் தொடர்புடைய த.மு.மு.க. அமைப்பின் பொதுச்செயலராக உள்ள காஜா கனியும் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு உதவி பெறும் கல்லூரியில் அரசு ஊதியம் பெறும் நிலையில், அரசியல் கட்சியில் மாநில பொறுப்பில் இருப்பதும், கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக டிரஸ்ட் நிர்வாகம் முதல்வருக்கு கடிதம் அனுப்பி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சட்ட ரீதியாக ஏற்றதா என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர் காஜா கனியிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கல்வித்துறை வட்டாரங்களில் இது குறித்து பரபரப்பு நிலவுகிறது.
