சென்னை: கடந்த நான்கரை ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக, தமிழக அரசு மீது பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது என, மத்திய கல்வித் துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2021–22 கல்வியாண்டிலிருந்து தற்போது வரை, தொடக்கப் பள்ளி வகுப்புகளில் மாணவர் இடைநிற்றல் சதவீதம் 0 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகவும், நடுநிலை வகுப்புகளில் 0 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் நடத்தும் தி.மு.க. நிர்வாகிகள் பணம் சம்பாதிப்பதற்காக, அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட வழங்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த கல்வியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தங்களின் கட்சியினரின் லாபத்திற்காக தி.மு.க. அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை தோல்வியடைந்தது என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர்மீது பெரும் கடன் சுமையை தி.மு.க. அரசு திணித்துள்ளதாகவும், வரும் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
