கோவை: தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது என்றும், நடிகர் **விஜய்**யிடம் இன்ஜினே இல்லை; அவர் இன்ஜின் பற்றி பேசவே கூடாது என்றும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அந்த பட்ஜெட்டின் நோக்கம்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் நாங்கள் பயணிக்கிறோம். தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது. விஜயை பொறுத்தவரை, அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்; அவரை வரவேற்கிறோம். அவர் பேசட்டும். அவருக்கு இ.வி.எம்., மெஷினே பதில் சொல்லும்.
டபுள் இன்ஜின்
எங்களிடம் டபுள் இன்ஜின் இருக்கிறது. விஜயிடம் இன்ஜினையே பார்க்கவில்லை. இன்ஜின் இருக்கிறதா? கார்பரேட்டர் இருக்கிறதா? இன்ஜினை ஸ்டார்ட் செய்ய ஆள் இருக்கிறாரா? எதுவுமே இல்லை. பெட்ரோலும் இல்லை; டீசலும் இல்லை. 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினால் தான் இன்ஜின் இருக்கிறது என்று சொல்ல முடியும். அந்த 234 வேட்பாளர்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டால் தான் பெட்ரோல் இருக்கிறது. விஜயிடம் இன்ஜினே இல்லை; அவர் இன்ஜின் பற்றி பேசவே கூடாது.
முதல் கடமை
விஜய் பேசும்போது மக்கள் கைத்தட்ட வேண்டும் என்பதே அவரது பேச்சின் தன்மை. அதில் ஆழமான கருத்துகள் இல்லை. என் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அவர் தற்போது டயாலிசிஸில் இருக்கிறார். அவரை கவனிப்பதே எனது முதல் கடமை. இதனால், கட்சியின் அடிப்படை பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உள்ளது.
6 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்
அதிகமாக பயணம் செய்ய முடியாது என்று கட்சியிடம் கேட்டுள்ளேன். அதனை கட்சியும் ஏற்றுக்கொண்டு, சிங்காநல்லூர் உட்பட தமிழகத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கு வேறு பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளது. கட்சி என்ன பணியை கொடுத்தாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
📰 தலைகுனிவு – அண்ணாமலை அறிக்கை
சென்னை எம்.கே.பி., நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தி.மு.க., ஆட்சியில் கல்வி நிலையங்களே போதைப் பொருட்களின் புகலிடமாக மாறியிருப்பது தமிழகத்திற்கே தலைகுனிவு.
புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சா பொட்டலம் இருப்பது, வருங்கால சந்ததியினரின் எதிர்காலம் குறித்து கடும் கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கஞ்சா போதையால் நடைபெறும் குற்றங்கள் மிக அதிகரித்துள்ளன.
நடவடிக்கை இல்லாத அரசு
சமீபத்தில் திருத்தணி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் இருந்த ஒரு வடமாநில இளைஞரை சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளி வெளியானது. அதற்குப் பிறகாவது தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், இந்தப் புழக்கத்தை கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பதே தவறு.
எட்டாவது உலக அதிசயம்
அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப்பொருள் புழக்கமும் சேர்ந்து விட்டது. 16 வயது சிறுவனுக்கு கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது. ஆனால் சென்னை மாநகர காவல்துறைக்கு தெரியவில்லை என்பது எட்டாவது உலக அதிசயம்.
நம்பி பலனில்லை
இன்று பள்ளிக்குள் வந்துவிட்ட கஞ்சா புழக்கம், நாளை வீடுகளுக்குள் வர அதிக நாட்கள் ஆகாது. இந்த கையாலாகாத தி.மு.க., அரசையோ, அதன் ஏவலாளிகளாக மாறிய காவல்துறையையோ நம்பி பலன் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
