புதுடில்லி: அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கதே என்றாலும், அது உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, உற்பத்தித் துறை சரிவடைந்து வருகிறது, முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்பப் பெறுகின்றனர், வீட்டு சேமிப்புகள் அதல பாதாளத்திற்கு சரிகிறது, விவசாயிகள் துன்பத்தில் தவிக்கின்றனர், வரவிருக்கும் உலகளாவிய தாக்கங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என குறிப்பிட்டு, இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் மத்திய பட்ஜெட்டில் கவனிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
பல திட்டங்கள்
இதுதொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ராகுல் எந்த திருத்தத்தை குறிப்பிடுகிறார் என்பது தனக்குத் தெரியவில்லை. பொருளாதாரமும் அதன் அடிப்படைகளும் வலுவாகவே உள்ளன என்றார். நாட்டின் பல துறைகள் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வரும் நிலையில், அதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளித்துறை, தோல்துறை, கிராமப்புறங்களில் பணிபுரியும் மக்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் சுயஉதவி குழு தொழில்முனைவோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள், பொது மக்களுக்கு ஆதரவு அளிப்பதையும், வெளிநாட்டு பொருளாதார தாக்கங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும், வெளியில் இருந்து வரும் எந்தவொரு ஏற்ற இறக்கத்தாலும் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாத வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அரசியல் ரீதியாக விமர்சிக்க விரும்பினால் தாராளமாக செய்யலாம். ஆனால், அந்த வாதங்களுக்கு அடிப்படையாக இருக்கும் உண்மைகளை முன்வைக்க விரும்பினால், அதை கேட்கவும் அதற்கு பதிலளிக்கவும் தயாராக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கதே என்றாலும், அது உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் மாநிலங்கள்
மேலும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த மாநிலங்களுக்கு தேவையானதை செய்து விட்டதாக அரசு கருதுவதாக கூறினார். மீண்டும் செய்தால், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் ஏன் செய்கிறீர்கள் என்ற கேள்வி எழும் என்றும், தற்போது தேர்தல் நடைபெறும் மற்றும் நடைபெறாத மாநிலங்களுக்கும் சமமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறினால், அதை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
