டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆலோசகராக பதவி வகித்த முகமது யூனுஸ், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றவில்லை என அந்நாட்டு அதிபர் முகமது ஷகாபுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், முகமது யூனுஸ் பதவியில் இருந்த ஒன்றரை ஆண்டுகளில் முக்கிய விவகாரங்கள் எதுவும் தன்னுடன் விவாதிக்கப்படவில்லை என கூறினார். தமக்கு எதிராக அரசியல் சதிகள் கட்டமைக்கப்பட்டதாகவும், நாட்டின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்பாடுகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
அரசியலமைப்பு விதிகளின்படி, வெளிநாட்டு பயணங்களில் இருந்து திரும்பிய பிறகு ஜனாதிபதியை சந்தித்து பயணத்தின் நோக்கம் மற்றும் பலன்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், முகமது யூனுஸ் மேற்கொண்ட 14 முதல் 15 வெளிநாட்டு பயணங்கள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என அதிபர் தெரிவித்தார்.
மேலும், தன்னை மாளிகையில் அடைக்கப்பட்ட கைதியாக மாற்றியதாகவும், கொசாவோ மற்றும் கத்தார் செல்ல திட்டமிட்டிருந்த பயணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அரசியலமைப்புக்கு முரணாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தன் பதவியில் நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு அந்த நீதிபதி ஒத்துழைக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் அரசியலமைப்பை பாதுகாக்க ராணுவமும், வங்கதேச மக்கள் கட்சியும் ஆதரவு அளித்ததாக அதிபர் ஷகாபுதீன் தெரிவித்துள்ளார்.
