அரசாணையால் ஜெப கூடங்கள் பெருகும்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
திருப்பூர்: ஓட்டு வங்கி அரசியலுக்காக சட்டத்துக்கு எதிராக செயல்படும் தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது என்று, அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இனிமேல் மத வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று பெற தேவையில்லை என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத ஜெப கூடங்கள் மற்றும் மசூதிகள் அதிகரித்து வருவதாகவும், அனுமதி இன்றி கட்டப்படும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் குறித்து புகார் அளித்தாலோ, அதிகாரிகளிடம் முறையிட்டாலோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
தடையில்லா சான்று பெற தேவையில்லை என்ற அரசாணையின் காரணமாக, மேலும் பல மத வழிபாட்டு தலங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த அரசாணை முழுக்க முழுக்க தி.மு.க.,வின் சிறுபான்மை ஓட்டு வங்கியை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை ஹிந்துக்கள் உணர வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் ஹிந்து முன்னணி சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் காடேஸ்வரா தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிந்து கோவில் கட்டுவதற்கு அரசு பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் நிலையில், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் பெருக எளிய நடைமுறைகளை உருவாக்குவது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும், தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
