பெங்களூரு:
கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள தங்க ராமர் சிலையை காணிக்கையாக அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா இதுகுறித்து கூறுகையில், கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ‘பார்சல்’ வழியாக அழகிய ராமர் சிலையை கோவிலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
தங்கத்தால் உருவாக்கப்பட்ட அந்த சிலையில் வைரங்கள், ரத்தினங்கள் உள்ளிட்ட அபூர்வமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த ராமர் சிலையின் மதிப்பு ரூ.30 கோடி வரை இருக்கலாம் என்றும், இதை காணிக்கையாக அளித்த பக்தரைப் பற்றிய விவரங்கள் தற்போது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். சிலை தொடர்பான முழுமையான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ராமர் சிலை தயாரிப்பில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த சிலை தொழில்நுட்ப நிபுணர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், நுணுக்கமான கலை வடிவத்தை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இந்த சிலையில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களின் விவரம் குறித்து வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வரும் டிசம்பர் 29 முதல் அடுத்தாண்டு ஜனவரி 2 வரை அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில், காணிக்கையாக வந்துள்ள தங்க ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என அனில் மிஸ்ரா தெரிவித்தார்.
