புதுடில்லி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இவ்வழக்கை டில்லிக்கு மாற்ற வேண்டும் என பா.ஜ., நிர்வாகி கல்யாணராமன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, இம்மனுவையும் அதனுடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரினார்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அமைச்சர் ராமச்சந்திரன் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். மேலும், தமிழக அமைச்சர்கள் குறித்த சொத்து குவிப்பு தொடர்பான பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.
