சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மீது அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்கள் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு அனுப்பியதாக கூறப்படும் ஆவணங்களில், டெண்டர் தொடர்பான கமிஷன் வசூல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அ.தி.மு.க., தன் அமைச்சரை காப்பாற்றவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதலில் நினைத்ததாகவும், பின்னர் முதல்வர் தன்னை காப்பாற்றிக் கொள்ளவே தாமதம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் பெருமளவிலான ஊழல் நடந்துள்ளதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அனைத்து கோப்புகளும் திறக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
