புதுடில்லி: டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அதன் தாக்கத்தை மத்திய அரசு உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறது.
அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிகளை அறிவித்து அமல்படுத்தியிருந்தார். ஏற்றுமதி – இறக்குமதி பற்றாக்குறையை சமநிலைப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என அவர் விளக்கம் அளித்தார். இந்த முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்க நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், டிரம்பின் வரிவிதிப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்ற டிரம்ப், அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரி உடனடியாக அமலுக்கு வரும் என அறிவித்தார். இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் எழுச்சி காணப்பட்டது.
இந்த சூழலில், அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பையும், அதிபர் டிரம்பின் அறிவிப்புகளையும் கவனித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள், தாக்கங்கள் மற்றும் சாத்தியங்களை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
