இஸ்தான்புல்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்துள்ள பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த துருக்கி திட்டமிட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த துருக்கி முன்வந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில், 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் உடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற உள்ள இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
