வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் இறுதியில் பலன் அடைந்தது ரஷ்யா மட்டுமே என ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தும் தாக்குதலில், இறுதியில் வெற்றி பெற்றது ரஷ்யா மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது.
எரிசக்தி வளங்களின் விலை உயர்வு காரணமாக, உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு புதிய நிதி வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால், ராணுவ தளவாடங்கள் உக்ரைனுக்கு சென்றிருக்கும். தற்போது அந்த உதவிகள் குறைந்துள்ளதால் ரஷ்யாவுக்கு கூடுதல் பலன் கிடைத்துள்ளது.
மேலும் மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் காரணமாக உலக நாடுகளின் கவனம் அங்கு திரும்பியுள்ளது. இதனால் உக்ரைன் பிரச்னை குறித்து உலகளாவிய கவனம் குறைந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச விதிகளின் அடிப்படையில் செயல்படும் சட்ட அமைப்புக்கு அமெரிக்கா சவால் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் அந்த சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
வெடிகுண்டுகள் மூலம் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பெற முடியாது. அதனை உறுதி செய்யக்கூடியது சர்வதேச சட்டங்களே என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த மோதல் மேலும் அதிகரிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். மத்திய கிழக்கில் உருவாகும் பதற்றம் ஐரோப்பாவைத் தாண்டி பல நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் ஆன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.
