டெஹ்ரான்: சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து எங்களுடன் தொடர்பு கொண்டு பேசுகின்றன. ஆனால், இந்த போரை துவக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தான் அவர்கள் பேச வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் தற்போது 7வது நாளை கடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் ஆட்சியாளர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளை தொடங்கியுள்ளன. இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டுடன் நாங்கள் இருக்கிறோம். அதே நேரத்தில், எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கவும் தயங்க மாட்டோம்.
ஈரான் மக்களை குறைத்து மதிப்பிட்டவர்களையும், இந்த போரை துவக்கியவர்களையும் நோக்கி தான் மத்தியஸ்தர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
