டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் எங்களுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அமெரிக்காவுடன் பேச்சு அல்லது பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எங்களிடம் இல்லை.
கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் ஜூன் மாதத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த சமயத்திலேயே எங்களை தாக்கினர்.
இந்த ஆண்டும் அவர்களுடன் பேசினோம். இந்த முறை நிலைமை வேறுபடும் என்று எங்களை நம்ப வைத்தனர். எங்களை தாக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.
மேலும் ஈரானின் அணுசக்தி தொடர்பான பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறோம் என்றும் தெரிவித்தனர். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
அதன்படி மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க குழுவும் கலந்து கொண்டது. பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதன் பின்னரும் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எங்களிடம் இருக்காது என்று நினைக்கிறேன் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி கூறினார்.
