வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.262 கோடி) இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் துறைமுக நகரமான சியாட்டில் அருகே சவுத் லேக் யூனியன் பகுதியில், நார்த் ஈஸ்டர்ன் பல்கலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டுலா என்ற இளம்பெண் முதுகலை பட்டம் படித்து வந்தார்.
2023ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி இரவு சாலையை கடந்தபோது, அதிவேகமாக வந்த சியாட்டில் போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. இதில் சுமார் 100 அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்ட ஜானவி கண்டுலா படுகாயமடைந்து உயிரிழந்தார். சம்பவ காட்சிகள் போலீசார் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும், போலீஸ் அதிகாரிகள் இறந்த மாணவியை கிண்டல் செய்யும் வகையில் பேசியதும் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சம்பவத்தையடுத்து மனித உரிமை அமைப்புகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்திய தூதரக அதிகாரிகளும் தலையிட்டனர். இதனைத் தொடர்ந்து ரோந்து வாகனத்தில் இருந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். வாகனத்தை ஓட்டியவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் 5 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, போலீஸ் அதிகாரி மற்றும் நகர நிர்வாகம் மீது 110 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரி 2024ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சியாட்டில் நகர அதிகாரிகள் ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டனர். இதன் மூலம் வழக்கு முடிவுக்கு வந்தது. காப்பீடு மூலம் இழப்பீடு தொகை செலுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சியாட்டில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஜானவி கண்டுலா மரணம் மனதை நொறுங்கச் செய்கிறது. இந்த இழப்பீடு அவரது குடும்பத்திற்கு சில மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
ஜானவி கண்டுலா குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கறிஞர் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
