சென்னை:
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் இன்று (டிச.,15) தொடங்கியது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சேலம் மாவட்ட நிர்வாகிகள், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை இபிஎஸ் அவர்களிடம் வழங்கினர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. பொதுவாக ஜனவரி மாதத்துக்குப் பிறகே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி செயல்பட தொடங்கியுள்ளன. ஏற்கனவே அ.ம.மு.க., மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்றுவருகின்றன.
சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று (டிச.,15) தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை இபிஎஸ் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை அவரிடம் வழங்கினர்.
கட்சியினர் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம். தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மனுக்கள் பெறப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள், 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
