திருச்சி: அதிகாரத்தில் பகிர்வு கேட்பது ஒன்றும் தவறு கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும் என்றும், அதில் எந்த குழப்பமும் இல்லை என்றும் கூறினார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் கூட்டணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகின்றன என்றார்.
திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்றும், தேர்தலை ஒருமித்த அணுகுமுறையுடன் சந்திக்கும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். கூட்டணியை உருவாக்குவதிலும் பாதுகாப்பதிலும் தங்கள் கட்சி அக்கறையுடன் செயல்படுகிறது என்றார்.
கூட்டணியில் உள்ள கட்சிகள் உரிமையோடு கோரிக்கைகளை முன்வைப்பது இயல்பானது என்றும், அதிகாரப் பங்கு கேட்பதால் கூட்டணி உடைந்துவிடாது என்றும் அவர் விளக்கினார். “நாங்களும் வெற்றிக்காக உழைக்கிறோம்; அதனால் அதிகாரத்தில் பகிர்வு கேட்கிறார்கள். இதில் தவறு இல்லை” என்றார்.
தமிழக அரசியல் சூழலில் ஆட்சியில் பங்கு பொருந்தாது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை குறிப்பிட்ட அவர், இவ்விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றார்.
மேலும், தங்கள் கட்சி கூட்டணியில் நீடிக்கும் என்றும், தங்களுக்கு உரிய கோரிக்கைகளை உரிமையோடு முன்வைக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
