அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு: காவல் துறை அதிகாரிகளை காப்பாற்ற அரசு முயலுகிறதா? – உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை:
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், தவறிழைத்த காவல் துறை அதிகாரிகளை பாதுகாக்க தமிழக அரசு முயற்சிக்கிறதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணாநகரில் வசித்த சிறுமியை அண்டை வீட்டில் இருந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றனர். அப்போது, புகாரில் குற்றவாளியின் பெயரை நீக்க வற்புறுத்தியதாகவும், இன்ஸ்பெக்டர் தங்களை தாக்கியதாகவும் கூறி பெற்றோர் பதிவு செய்த வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டு விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக, அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், இழப்பீடு வழங்கவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், போக்சோ சட்ட விதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் அரசிடம் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
“குற்ற வழக்கும் துறை ரீதியான நடவடிக்கையும் வேறு. சட்டத்தை காக்க வேண்டிய போலீசாரே சட்டத்தை மீறியுள்ளனர். தவறிழைத்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது தண்டனை அல்ல. அவர்களை காப்பாற்ற அரசு ஏன் துடிக்கிறது?” என நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
