மாஸ்கோ: அமெரிக்க தடைகளை மீறி எண்ணெய் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய எண்ணெய் டேங்கரை பாதுகாக்க, போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. அந்த எண்ணெய் டேங்கரை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது.
‘பெல்லா 1’ என்ற பெயரிலான இந்த எண்ணெய் டேங்கர், தென் அமெரிக்க நாடான வெனிசுலா கடற்பகுதியில் இருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் தடைகளை மீறி எண்ணெய் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் இந்த கப்பலை கைப்பற்ற அமெரிக்க கடற்படை முயன்றபோது, அது தப்பிச் சென்றது.
பின்னர், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ரஷ்யாவின் வடக்கு பகுதியான முர்மான்ஸ்க் நோக்கி அந்த கப்பல் பயணித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படையினர் அந்த டேங்கரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே, ரஷ்யா அந்த கப்பலில் தன் கொடியை ஏற்றி, ‘மரினெரா’ என பெயர் மாற்றம் செய்து, அது தங்களின் பாதுகாப்பிற்குட்பட்டது என அறிவித்தது. மேலும், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்ட பல போர்க்கப்பல்களை அனுப்பி எண்ணெய் டேங்கருக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த பாதுகாப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த எண்ணெய் டேங்கரை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என, பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
