வடகிழக்கு மாநிலமான அசாமின் சாச்சார் மாவட்டத்தில் நடைபெற்ற துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்ட விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
எல்லையோர கிராமங்களை வலுப்படுத்தவும், மக்கள் இடம்பெயர்வை தடுக்கவும், சர்வதேச எல்லைகள் வழியாக நடைபெறும் சட்டவிரோத ஊடுருவலை கட்டுப்படுத்தவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அசாமில் ஊடுருவல் அதிகரித்ததற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளே காரணம் என குற்றஞ்சாட்டிய அமித் ஷா, தற்போதைய மாநில அரசு இந்த பிரச்னையை திறம்பட கையாள்ந்து வருவதாக பாராட்டினார்.
முன்னாள் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் குறைவாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். எல்லையோர கிராமங்களில் உயர்தர சாலை வசதிகள் உருவாக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் அசாம் வளர்ச்சி பாதையில் முன்னேறியுள்ளதாக கூறிய அமித் ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெள்ள பாதிப்பு இல்லாத மாநிலமாக அசாம் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
