சென்னை: அமைச்சர் ரகுபதியின் சமீபத்திய பேச்சு, திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டுகளாக தமிழக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை மற்றும் பண்பாட்டை தொடர்ந்து கேலி செய்வதும், முதல்வர் உட்பட திமுக தலைவர்கள் அனைவரின் ஹிந்து விரோத மனநிலையை மீண்டும் நிரூபிக்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் திமுகவினரின் போக்கை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டினால், அதற்கே எதிராக நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நிலைக்கு திமுக தலைவர்கள் சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.
நாவடக்கம் இன்றித் தொடர்ந்து பேசிவரும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் உரிய பாடம் புகட்டுவார்கள் எனவும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
