‘ஹிந்துக்கள் 2–3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்’ – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில், முஸ்லிம்கள் மக்கள்தொகை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். இதனால் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ஹிந்து தம்பதியர் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், ஹிந்துக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். இதனால் எதிர்காலத்தில் மக்கள்தொகை அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஹிந்துக்கள் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும். முடிந்தவர்கள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். முஸ்லிம்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியே சென்றால், அசாமில் அவர்களின் மக்கள்தொகை 40 சதவீதத்தை தாண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிந்துக்களின் மக்கள்தொகை 35 சதவீதத்துக்கும் கீழே சென்றால், அதன் விளைவுகளை எதிர்கால தலைமுறையினர் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அண்டை நாடான வங்கதேசம், வடகிழக்கு இந்தியாவை தங்களுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்து வருவதாகவும், இதற்கு நேரடியாக போர் செய்யத் தேவையில்லை; மக்கள்தொகை 50 சதவீதத்தை தாண்டினாலே அது தானாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, அசாம் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், முஸ்லிம்களுக்கு 48 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை சுட்டிக்காட்டிய ஹிமந்த பிஸ்வ சர்மா, அவரை இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை என்பதற்குக் காரணம், காங்கிரஸ் முஸ்லிம் வாக்குகளை நம்பியே அரசியல் செய்கிறது என்றும் விமர்சித்தார்.
