சென்னை: ஹிந்தியை திணிக்கக் கூடாது. அதே நேரத்தில் ஹிந்தி மொழியை கண்மூடித்தனமாக எதிர்க்கவும் கூடாது என்று முன்னாள் துணை ஜனாதிபதி எம். வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசியதாவது: தமிழ் மிகவும் அழகான மொழி. ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியில் சிறந்து விளங்க வேண்டும். முதலில் தாய்மொழியில் பேச வேண்டும். அதன் பிறகு பிற மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம், அண்டை வீட்டாரிடம் மற்றும் வெளியே செல்லும் இடங்களிலும் தாய்மொழியில் பேச வேண்டும். அப்போது தாய்மொழிக்கு மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்கும்.
அதேவேளையில், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். அந்நிய மொழியான ஆங்கிலத்துக்கு நான் எதிரானவன் அல்ல. ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக இந்திய மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகள் நாட்டில் உள்ளன.
ஹிந்தியை எதிர்க்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணத்தில் இருக்கக் கூடாது. ஹிந்தி திணிக்கக் கூடாது. அதே சமயம் ஹிந்தியை எதிர்க்கவும் கூடாது. ஆரம்பத்தில் நான் ஹிந்தி கற்கவில்லை. பின்னர் டில்லிக்குச் சென்றபோது ஹிந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். தேசிய அளவில் பணியாற்ற விரும்பினாலோ, பிற மாநிலங்களில் செயல்பட விரும்பினாலோ ஹிந்தியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
