டாக்கா: முன்னாள் பிரதமர் **ஷேக் ஹசீனா**வை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களை தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
சுமார் 18 மாதங்கள் கழித்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ள அக்கட்சி ஆட்சியை அமைக்கிறது.
இந்நிலையில், கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் சலாவுதீன் அகமது தெரிவித்ததாவது: ஷேக் ஹசீனாவை சட்டப்படி முறையான விசாரணைக்கு உட்படுத்த வங்கதேசத்திற்கு நாடு கடத்த இந்தியாவை கட்சி வலியுறுத்தும். இந்த விவகாரத்தை வெளியுறவு அமைச்சர் முன்னெடுத்து வருவதை வரவேற்கிறோம்.
சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவரை நாடு கடத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். இது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான விவகாரம். இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவை வங்கதேசம் விரும்புகிறது என அவர் தெரிவித்தார்.
