வாஷிங்டன்:
வெனிசுலாவில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் வளங்களில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை அமெரிக்கா சுத்திகரித்து உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறுகையில், வெனிசுலாவில் இருந்து தினமும் பெருமளவில் கச்சா எண்ணெய் எடுத்து சுத்திகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் மூலம் வெனிசுலா பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்றும் தெரிவித்தார். “நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டதை நாம் மீண்டும் எடுத்துக் கொண்டோம்” என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், வெனிசுலா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் கிரிஸ்டோபர் ரைட் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வெனிசுலாவில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து நாடுகளுக்கும் விற்பனை செய்யப்படும் என்றும், இந்தியாவுக்கும் எண்ணெய் வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாக இருந்தது. ஆனால் சமீப கால வரிவிதிப்பு தொடர்பான முடிவுகளால், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்தது. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு வெனிசுலா எண்ணெய் வழங்க அமெரிக்கா தானாக முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
