மும்பை: வெனிசுலாவில் நடந்ததைப் போல, பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி மசூத் அசாரை கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் **நரேந்திர மோடி**க்கு, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில், வெனிசுலா அதிபர் **நிக்கோலஸ் மதுரோ**வை அமெரிக்க ராணுவம் கைது செய்து, புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளது. சரியான திட்டமிடலுடன் வெனிசுலாவுக்குள் நுழைந்த அமெரிக்க படைகள், பாதுகாவலர்களை சுட்டு வீழ்த்தி, மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரோவை சிறைக்கு அழைத்துச் செல்லும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த சம்பவத்திற்கு ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதே நேரத்தில், இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஓவைசி, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ராணுவத்தை வெனிசுலாவுக்கு அனுப்பி, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்த செய்தியை நாம் அறிவோம். அதேபோல், பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி, மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதிகளை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்,” என்று கூறினார்.
மேலும், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் இதை செய்ய முடிகிறது என்றால், பிரதமர் மோடியாலும் இதை செய்ய முடியும்,” என்றும் ஓவைசி தெரிவித்தார்.
