சென்னை: விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 34வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பின்னர் அவர் உரையாற்றினார். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பட்டம் பெற்றவர்கள் நேர்மையுடன் தேசத்திற்காக சேவை செய்யும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பல்கலைக்கழகக் கல்விக்கு பிறகும் தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி பல மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், மாணவர்கள் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். விரைவில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், 2047ம் ஆண்டுக்கு முன்பே இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும் என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
