புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஜனவரி 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதுடன், குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகவும் உள்ளது. விடுமுறை நாளில் அரசு அலுவலகங்கள் மற்றும் பங்கு சந்தைகள் இயங்காத நிலையில், அந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக, Rajnath Singh தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலேயே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவு அமல்படுத்தப்பட்டால், Nirmala Sitharaman தொடர்ந்து 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
