சென்னை: விஜய் அரசியலுக்கு வந்ததற்குப் பிறகே திமுக கூட்டணி உருவானது என்று கூறுவது அரசியல் அறியாமை என்றும், அது பொருளற்ற கருத்து என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஜய் மீது உள்ள பயத்தால் திமுக அதிக கூட்டணி கட்சிகளை சேர்த்துள்ளது என்று கூறுபவர்கள் தான் உண்மையில் பதற்றத்திலும் பயத்திலும் உள்ளனர். திமுக கூட்டணி என்பது விஜய் தனது கட்சியை துவங்குவதற்கு முன்பே உருவான ஒரு ‘மெகா’ கூட்டணி ஆகும். இதில் தற்போது சில கட்சிகள் மட்டுமே புதிதாக இணைந்துள்ளன.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தான் திமுக கூட்டணி உருவானது என்று கூறுவது அரசியல் அறியாமையும், பொருளற்ற உளறலுமாகும். வெளிப்படையாகவே கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று விஜய் அறிவித்திருந்தாலும் கூட, அதிமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளோ அல்லது திமுகவை எதிர்க்கும் கட்சிகளோ அவருடன் இணையவில்லை.
இதனை மறைப்பதற்காகவே இத்தகைய கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. விஜயின் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தனிப்பட்ட விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
பீஹாரில் நன்மதிப்புடன் இருந்த நிதிஷ்குமார் பாஜவுடன் இணைந்த பிறகு அவரது நற்பெயர் குறைந்தது. தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகி ராஜ்யசபா எம்பி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதே நிலை அதிமுகவுக்கும் ஏற்படக்கூடாது என்பதையே நான் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருகிறேன். காலப்போக்கில் அவர்களும் பாஜவை புரிந்து கொள்வார்கள் என்று திருமாவளவன் கூறினார்.
