பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், அந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, ‘வளர்ந்த பாரதம் – ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ எனப்படும் ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ மசோதா, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மசோதாவில் வேலை நாட்கள் 100லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த திட்டத்திற்கு மாநில அரசுகள் 40 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இந்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ மசோதா சட்டமாகியுள்ளது.
