சென்னை: “மாணவர்கள் தங்களின் கனவுகளை எட்ட, அவற்றை விடாமல் துரத்த வேண்டும்,” என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் – நிக்கோபார் பகுதிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கவர்னர் ரவி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மாணவர்களிடம் அவர் பேசியதாவது:
மாணவப் பருவத்திலேயே நாட்டின் மிக முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது சிறப்பானது. இது உங்களுக்கும், நாட்டுக்கும் பெருமையும் கவுரவமும் அளிக்கும். இதற்காக நீங்கள் பல தடைகளை கடந்து வந்திருப்பீர்கள். நான் தேசிய மாணவர் படையில் இருந்தபோது நல்லொழுக்கத்தை கற்றேன்; அது இன்றுவரை எனக்கு பயன்படுகிறது.
தினமும் அதிகாலை எழுவது, என் படுக்கையை நானே மடிப்பது, சுத்தம் செய்வது, யோகா, உடற்பயிற்சி செய்வது, எதையும் ஒழுங்குடன், குறித்த நேரத்தில் செய்வது போன்ற பழக்கங்கள் அனைத்தும் தேசிய மாணவர் படையில் இருந்தபோது எனக்கு கிடைத்தவை.
நீங்கள் தற்போது மிக முக்கியமான பருவத்தில் இருக்கிறீர்கள். உங்கள் கனவுகள் பெரிதாக இருக்கட்டும். அதற்கான முயற்சிகளையும், உழைப்பையும் பெரிதாக வழங்குங்கள். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும், அதை விடாமல் துரத்துங்கள். வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். ‘விக்சித் பாரத்’ எனும் வளர்ந்த பாரதம், உங்கள் கைகளில்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
