சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ளன. மிகவும் செங்குத்தான இந்த வளைவுகளுக்கு, பண்டைய கால மன்னர்களின் புகழை நினைவுகூரும் வகையில் அவர்களது பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 08வது கொண்டை ஊசி வளைவிற்கு ‘தகடூர் அதியமான் வளைவு’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த கோடை விழாவின் போது சாலை புதுப்பிப்பு பணிகள் நடைபெற்றபோது, இந்த 08வது கொண்டை ஊசி வளைவிற்கு நெடுஞ்சாலை துறையினர் ‘ஈவெரா’ என்ற பெயரை மாற்றி வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் அந்த வளைவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, ‘ஈவெரா’ என்ற பெயரை அழித்து, அதன் மீது கருப்பு பெயின்ட் அடித்து, ‘தகடூர் அதியமான்’ வளைவு என பிளக்ஸ் ஒட்டினர். போராட்டத்துக்குப் பிறகு கலைந்து சென்ற நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த 100 பேர் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் ஒன்று திரண்டனர். அவர்கள், நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியிருந்த பிளக்ஸின் மீது ‘ஈ.வெ.ரா., வளைவு’ என்ற பிளக்ஸை ஒட்டியதுடன், நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.
இந்த தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கிடையில், இன்று இரவு நெடுஞ்சாலை துறையினர் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டியிருந்த ‘ஈ.வெ.ரா., வளைவு’ என்ற பிளக்ஸ் பேனரை அகற்றினர். தொடர்ந்து, அந்த வளைவில் மீண்டும் ‘தகடூர் அதியமான் வளைவு’ என எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
