புதுடில்லி: வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உறுதியுடன் புதிய பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற ‘சேவா தீர்த்’ புதிய பிரதமர் அலுவலக திறப்பு விழாவில் அவர் பேசியதாவது: பிப்ரவரி 13 இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய தொடக்கத்தை குறிக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உறுதியுடன் புதிய அலுவலகத்திற்குள் நுழைகிறேன்.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலக கட்டடங்கள் பிரிட்டிஷ் பேரரசின் அடையாளங்களாக கட்டப்பட்டன. அவற்றின் பின்னணியில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கம் இருந்தது. தற்போது கட்டடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் விருப்பம்
புதிய பிரதமர் அலுவலக கட்டடங்கள் இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் 140 கோடி மக்களின் விருப்பங்களை முன்னேற்றும் அடிப்படையாக அமையும். இந்த உணர்வோடு சேவா தீர்த் மற்றும் கர்தவ்ய பவனை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஊக்கம்
21ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்துள்ளது. வளர்ந்த இந்தியா என்ற பார்வை கொள்கைகள் மட்டுமல்ல, பணியிடங்கள் மற்றும் கட்டடங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். நாடு நிர்வகிக்கப்படும் இடம் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
நேரம் மிச்சம்
டில்லியில் பல அமைச்சகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயங்கி வருகின்றன. இவற்றுக்கான வாடகைக்கு ஆண்டுதோறும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது. சேவா தீர்த் மற்றும் கர்தவ்யா கட்டடங்கள் மூலம் செலவுகள் குறைக்கப்படும்; நேரம் மிச்சமாகும்.
முன்னேற்றம்
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய அடிமைத்தன மனநிலையிலிருந்து வெளியேறி முன்னேற்ற பாதையில் செல்வது முக்கியம். சுதந்திரத்திற்குப் பிறகும் அடிமைத்தனத்தின் சின்னங்கள் நீடித்துள்ளன என பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
