புதுடில்லி: இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதேபோல், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், முதலீடு ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவுடன் உள்ள பொருளாதார உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நாடுகள் பெற்ற ஒப்பந்தத்தை விட, இந்தியா பெற்றுள்ள ஒப்பந்தம் சிறந்தது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அது குறித்த கூட்டறிக்கை இந்த வாரத்திலேயே வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
